திருப்புகழ் வள்ளிமலை சுவாமிகள்
ஒஞ்சிமோர்
இப்போது இருக்கும் சிறந்த நுணுக்கங்களைக் கொண்டு புராணங்கள்,
இதிகாசங்கள், Folk Tales எனப்படும் கர்ண்பரம்பரைக் கதைகள் முதலியவற்றைச் சினிமாப் படங்களாக எடுக்கலாம். மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை எடுக்கிறார்கள். ஆனால் அவை வடநாட்டுப் படங்கள். அவையும் அவற்றின் வசனங்களும்.....
தமிழிலேயே அவற்றை எடுக்கவேண்டும்.
ஒரு காலத்தில் கதைகள் சொல்வோர் இருந்தனர். கதாகாலட்சேபமும் இருந்தது. கோயில்களில் புராணம் படித்தலும் புராண அரங்கேற்றமும் இருந்தது.
இப்போதுள்ள பரபரப்பு நிலையில் யாரும் எங்கும் அமைதியாக மெனக்கேட்டு உட்கார்ந்து கதை கேட்கப்போவதில்லை.
ஆகவே கதை சொல்வதைப் படமாக்கினால்.....? அல்லது ஸீடீயாகப் பதிவு செய்தால்...?
அவரவர் இஷ்டத்துக்கும் வசதிக்கும் ஏற்ப கதைகளைக் கேட்கமுடியும்.
ஒரு காலத்தில் தெருக்கூத்து நடக்கும்போது நடிகர் யாராவது சிறப்பாக ஒரு காட்சியில் நடித்துவிட்டாலோ, பார்வையாளர்கள், 'ஒஞ்சிமோர்' கேட்பார்கள்.
இஞ்சியையும் சீரகத்தையும் உப்பையும் போட்டு நீர்மோர் தயாரிப்பார்கள்.
இதை 'இஞ்சிமோர்' என்று சில சமயங்களில் சொல்வார்கள்.
அந்த இஞ்சிமோருக்கும் இந்த ஒஞ்சிமோருக்கும் சம்பந்தமில்லை.
'Once More" என்பதே ஒஞ்சிமோராக ஆகிவிட்டிருக்கிறது.
மேலைநாட்டு மரபில் Encore என்ற மரபு இருக்கிறது.
பாடிய பாட்டை மீண்டும் பாடுவது; அல்லது ஷோவின் முடிவில் அவர்களுடைய பேர் போட்ட பாட்டைப் பாடுவது அல்லது காட்சியை நடிப்பது. மோனோ ஆக்ட் என்பது அடிக்கடி என்கோருக்கு ஆளாவது உண்டு.
திருப்புகழை உலகறியச்செய்த சித்தர் வள்ளிமலை சுவாமிகள்.
அவர் ஒருமுறை ஒரு கூட்டத்தில் திருப்புகழைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் சுருதிக்காகவும் தாளத்துக்காகவும் 'ஏகதாரை' என்னும் இசைக்கருவியைப் பக்கவாத்தியமாக வைத்துப் பாடுவார்.
பாடி முடித்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவன் "ஒன்ஸ்மோர்" என்று
கத்தினான்.
ஆனால் சுவாமிகளோ, "நோமோர்" என்று சொல்லியவாறு ஏகதாரையை வைத்துவிட்டு எழுந்தார்.
ஒன்ஸ்மோர் கேட்டவன் ஒரு மாந்திரீகன். அவன் ஏதோ சூன்யத்தைப்
பிரயோகித்துவிட்டான்.
சுவாமிகளிக் கை வீங்கிவிட்டது. ஏகதாரையைத் தூக்கவும் முடியவில்லை.
இதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் அறிந்த சுவாமிகள் தம்முடைய தவ வலிமையால் சூனியத்தைத் திருப்பிவிட்டார்.
விரைவில் அந்த மாந்திரீகன் கதறிக்கொண்டு சுவாமிகளிடம் வந்தான்.
அவனுடைய கைகள் வீங்கியிருந்தன. மிகவும் வலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.
"ஐயா, உங்களுடைய மகிமை தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து சௌகரியப்படுத்துங்கள்", என்று கெஞ்சினான்.
சுவாமிகள் கொஞ்சம் விபூதியை எடுத்தார்.
"நீ வைத்திருக்கும் அந்த மூணு சுழி மந்திரத்தை இனிமேல் யார்மேலும் பிரயோகிப்பதில்லை என்று சத்தியம் செய்", என்றார்.
அவனும் சத்தியம் செய்தான்.
அத்துடன் சுவாமிகள் திருநீற்றை அவன் கைகளில் போடவும் வீக்கம் மறைந்தது. வலியும் மறைந்தது.
பாருங்கள்... எங்கயோ ஆரம்பித்து எங்கயோ வந்தாச்சு.... இப்படி
அடிக்கடி காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், தாம் உபன்யாசம் செய்யும்போது சொல்வதுண்டு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment