Friday, October 5, 2012

PEY KARUMBU



பேய்க்கரும்பு

பட்டினத்தார் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? 
தாடி மீசையுடன், இடையில் கோவணத்தைத் தரித்துக்கொண்டு, 
திருநீறணிந்து கொண்டு, கையில் ஒரு கரும்பைத் தூக்கிக் கொண்டிருப்பதாகக் காட்டியிருப்பார்கள். 
அது சாதாரணக் கரும்பு இல்லை.
பேய்க்கரும்பு என்பார்கள். 
அதை ஏன் அவர் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்?
அதற்கு ஒரு பின்னணி உண்டு. 
பட்டினத்தார் ஒருமுறை ஓரிடத்தில் தியானத்தில் இருந்தார். 
அப்போது அந்தப் பக்கத்தில் இருந்த தடாகத்தில் அந்த நாட்டின் அரசி குளித்துக்கொண்டிருந்தார். அவருடைய நகைகளை கரையில் கழற்றி வைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார். 
அப்போது ஒரு திருடன் அந்த ஆபரணக் குவியலைக் கண்டான். அதில் இருந்த மிக உயர்ந்த முத்துமாலையை எடுத்துக்கொண்டு ஓடினான். 
காவலர்கள் பார்த்துவிட்டார்கள். ஆகையால் அவனை விரட்டிக் கொண்டு அவர்களும் ஓடினார்கள். 
பட்டினத்தார் தியானத்தில் இருந்த இடத்திற்கு வந்த திருடன், இனி எப்படியும் காவலர்கள் பிடித்துவிடுவார்கள் என்ற  நிலையில் தன்னிடமிருந்த முத்துமாலையைப் பட்டினத்தார் கழுத்தில் போட்டு விட்டு ஓடிவிட்டான்.
அங்கு வந்த காவலர்கள் பட்டினத்தார் கழுத்தில் மாலையைப் பார்த்தவுடன் அவரை இழுத்துக்கொண்டு அரசன் முன் கொண்டு சென்றார்கள்.
அந்த நாட்டின் அரசர் பர்த்ருஹரி.
அவரிடம் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட பட்டினத்தாரைக் 
காவலர்கள் காட்டி பட்டினத்தார்தான் முத்துமாலையைத் திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்கள்.
உடனேயே பர்த்ருஹரி பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றிவிடுமாறு ஆக்ஞை பிறப்பித்தார். 
காவலர்கள் பட்டினத்தாரை இழுத்துச் சென்று கழுமரத்தை நாட்டி அதில் அவரைச் செருகிவிடப் போனார்கள். 
அப்போது பட்டினத்தார் கழுமரத்தைப் பார்த்து, "முன்செய்த தீவினைதான் இங்ஙனே வந்து மூண்டதுவோ!", என்றார்.
அப்படிச் சொன்னமாத்திரத்தில் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. 
       காவலர்கள் ஓடிச்சென்று அரசரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். 
  அரசர் ஓடிவந்தார். 
பட்டினத்தார் கால்களில் விழுந்தார்.
பட்டினத்தார் ஒன்றுமே சொல்லாமல் அவ்விடத்தை விட்டுச் சென்றார். 
ராஜா பர்த்ருஹரி தன்னுடைய ஆடைகளையெல்லாம் களைந்து எறிந்துவிட்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு பட்டினத்தார் பின்னால் போனார். 
பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாருடன் சென்றவர் பிச்சை 
எடுக்கலானார். 
தமக்கும் பட்டினத்தாருக்கும் சேர்த்துப் பிச்சையெடுத்துக்கொண்டு 
வருவார். 
இரண்டு பேருக்குச் சோறு வாங்குவதென்றால் இருகைகளில் ஏந்திக் 
கொண்டுவரமுடியவில்லை. 
ஆகவே ஒரு குயவனிடம் சென்று ஒரு சட்டியைப் பிச்சையாக வாங்கிக் கொண்டார். அதுவே அவருக்குப் பிச்சைப் பாத்திரமாகிவிட்டது.
அதில் அவர்  பிச்சையெடுத்துக்கொண்டு வந்து பட்டினத்தாரிடம் 
கொடுப்பார். அவர் உண்டதுபோக மீதியைப் பத்திரகிரியார் சாப்பிடுவார். 
சில நாட்களில் ஒரு பெட்டைநாய் அவரிடம் வந்தது. அதற்கும் சாப்பாடு 
போட்டுக்கொண்டிருந்தார்
ஒருநாள் பட்டினத்தார் அவரிடம், "இங்கு இரண்டு பேருமாய் இருப்பது 
சரியாக இல்லை. நீர் மேலக்கோபுர வாயிலில் பிச்சை எடும். நான் இங்கேயே இருக்கிறேன்", என்றார். 
பத்திரகிரியார் அவரை விட்டுச்செல்ல மனமில்லாமல் அழுது புலம்பினர்.
        ஆனால் பட்டினத்தார் சொன்னது சொன்னதுதான். 

ஆகவே பத்திரகிரியார் மேலைக்கோபுர வாசலுக்குச் சென்றார். 
சில காலம் கழித்து திருவிடைமருதூர்க் கோயிலில் இருந்த மருதீசர் ஒரு பெரியவர் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். 
பட்டினத்தார், "ஐயா நான் சன்னியாசி. கொடுப்பதற்கு என்னிடம் 
ஒன்றுமில்லை. மேலைக் கோபுரவாயிலில் ஒரு சம்சாரி இருக்கிறார். 
அவரிடம் கேளும்", என்று அனுப்பிவிட்டார். 
மேலை வாயிலுக்குச் சென்ற பெரியவர் அங்கேயிருந்த பத்திரகிரியாரிடம், "இங்கேயுள்ள சம்சாரி ஒருவரிடம் பிச்சை கேட்குமாறு கீழை வாயிலில் உள்ள சித்தர் ஒருவர் என்னை இங்கே அனுப்பினார். எங்கே அந்த சம்சாரி?" என்று கேட்டார்.
பத்திரகிரியாருக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. உடனே தம்முடைய பிச்சைப் பாத்திரத்தை எடுத்து அவருடன் இருந்த பெட்டை நாயின் தலையில் அடித்தார். பாத்திரமும் உடைந்தது. நாயும் இறந்தது. 
மருதீசரும் மறைந்தார்.
பத்திரகிரியார் தவத்தில் மூழ்கினார்.
அந்த நாய் பத்திரகிரியாரின் எச்சிலை உண்ட புண்ணியத்தினால் 
காசிராஜனின் மகளாகப் பிறந்தது. 
அந்த ராஜகுமாரிக்குக் கல்யாணம் செய்யவேண்டிய சமயத்தில், அவள், "திருவிடை மருதூரில் ஒரு பெரிய சித்தர் இருக்கிறார். அவரைத்தான் நான் மணந்துகொள்வேன். அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்." என்று பலவாறு பிடிவாதம் பிடித்தாள். 
        ஆகவே அவளைக் காசிராஜன் திருவிடை மருதூருக்கு அழைத்துச்சென்றான். 
மேலக்கோபுர வாயிலுக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரைப் 
பார்க்கவும் அரசகுமாரி, "நாதா, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன். ஒரு கன்னிப்பெண் சாவால் ஏற்படும் கடுமையான தோஷம் உங்களைப் பீடிக்கும்!", என்றாள். 
"மருதவாணா! இது என்ன சோதனை?" என்று அலறியவாறு பத்திரகிரியார் கோயிலுக்குள் சென்றார். நேரே கர்ப்பக்கிருஹத்துக்குச் சென்றார். அப்போது கர்ப்பகிருஹத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அதற்குள் பத்திரகிரியார் சென்று மறைந்தார். அரசகுமாரியும் அவரைத் தொடர்ந்து ஜோதிக்குள் சென்று மறைந்தாள். ஜோதியும் மறைந்தது. 
இதை அறிந்த பட்டினத்தார், "பின்னால் வந்தவன் முன்னால் சென்று
விட்டான். மருதவாணா, இது என்ன பாரபட்சம்?" என்று ஈசனிடம் கேட்டார். 
அப்போது அசரீரியான வானொலி ஒன்று, "பட்டினத்துப் பிள்ளையாரே! என்றைக்கு உமக்குப் பேய்க் கரும்பு இனிக்கிறதோ, அப்போது உமக்கு அனைத்தும் சித்தியாகி எம்மை வந்தடைவீர்!" என்றது.
பேய்க்கரும்பு என்பது கரும்பு போன்ற தாவரம். ஆனால் மிகவும் கசக்கும்.
அதிலிருந்து பட்டினத்தார் பேய்க்கரும்பு ஒன்றைக் கையில் வைத்துக்
கொண்டு அடிக்கடி அதைச் சுவைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலானார். 
பேய்க்கரும்பு இனிக்கவேண்டும். 
அதற்கு முன்னால் தித்திப்புக் கரும்பு கசந்துவிடவேண்டும். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment