தானமும் தர்மமும்
அறஞ்செய விரும்பு
ஈகை நம் சமுதாயத்தில் எவ்வளவோ முக்கியத்துவம் வகித்தது.
ஆனால் பிற்காலத்தில் ஈகையை வெறுத்து, கொடை
கொடுக்காமல் தப்பிக்க வழி தேடிய யாரோ புண்ணியவான் ஒருவர் பழமொழி ஒன்றை ஏற்படுத்திவிட்டார்.
'தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்' என்பதே அது. இதைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் நல்லது.
ஆனால் உண்மையிலேயே கஞ்சத் தனத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்கே இந்தப் பழமொழி தற்சமயம் நாட்டில் (மலேசியா) நம்மவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
நல்லவேலை ஔவையார் காது பட இந்த ஆள் இதைச் சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் பாடியே சபித்துவிட்டிருப்பார்.
தன்னையும் மிஞ்சி தானமும் தர்மமும் செய்தவர்களின்
பெயரும் புகழும்தான் இன்றளவும் வாழ்கின்றன.
பெண் ஒருத்தி தன்னையும் மிஞ்சி அளித்த நெல்லிக்கனி
தானம்தான் உலகிற்கு கனகதாரா தோத்திரத்தை ஆதிசங்கரரின்
வாயிலாக ஏற்படுத்தித் தந்தது.
தன் தலையையும் புலவருக்குக் கொடுத்த குமணனின் பெயர் நிலைத்து நிற்கிறது.
ஈரக்குணம் இல்லாதவர்கள் நம்முடைய நீதி சாஸ்திரங்களாலும் பெரும் புலவர்களலும் சபிக்கப்பட்டவர்கள்!
'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு' (குறள்)
சமுதாயம் நோயுற்ற சமுதாயமாக விளங்கி விடக்கூடாது
என்பதற்காகத்தான் முப்பத்திரண்டு வகை அறங்களை
ஏற்படுத்தினார்கள்.
தர்மங்களைப் போற்றிப் பாதுகாப்பவள் அம்பிகை.
அறம் வளர்த்த நாயகியாகவும் தர்ம சம்வர்த்தினியாகவும்
அன்னபூரணியாகவும் அவளே விளங்குகின்றாள்?
தர்மம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
Caring Society என்பதைத் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே தர்மங்களின் உதவியோடு நிறுவியிருக்கிறார்கள்.
சமுதாயத்தை ஆங்கில மரபில் இருவகையாகப் பிரித்துள்ளனர்.
‘Give Society, Take Society’ கொடுக்கும் சமுதாயம் எடுத்துக் கொள்ளும் சமுதாயம் என்பவையே அவை.
கொடுக்கும் சமுதாயம் தியாக உணர்வு கொண்டது.
எடுத்துக் கொள்ளும் சமுதாயத்தில் சுயநல உணர்வுதான் மேலோங்கி நிற்கும்.
கொடுக்கும் சமுதாயத்தின் தியாகத்தால் எடுத்துக் கொள்ளும் சமுதாயம் வாழ்ந்து, வளர்ந்து, வளமுடன் விளங்கும்.
இது மனித சமூகவியல் நியதி.
கொடுக்கும் சமுதாயம் இல்லையெனில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர். சமுதாயமும் முடிவில் அழிந்துவிடும்.
டார்வின் சித்தாந்தப்படி மிருக உணர்வு கொண்ட பலவான்களே எஞ்சுவர்.
தனக்கு மிஞ்சியே தானம் செய்யுமாறு எந்தச் சமயமும்
போதிக்கவில்லை.
தன்னுடைய சம்பாத்தியம் எவ்வளவாக இருப்பினும் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸக்காட் (zakat), ·பித்ரா Fitra என்ற பெயரில் கொடுக்குமாறு இஸ்லாம் கூறுகிறது.
'டித்' (Tith) என்ற பெயரில் அதுபோன்ற தர்மத்தைக் கிருத்துவம் வலியுறுத்துகிறது.
'தம்மதான' என்று அதையே பெளத்தமும் வற்புறுத்துகிறது.
'ஸெடெக்கா' என்றொரு வகை தர்மத்தை யூதர்கள் செய்கிறார்கள்.
இவை அனைத்துமே வலியுறுத்தப்பட்ட தர்மங்கள்.
இந்து சமயம் மட்டும் விதிவிலக்கா என்ன?
தனக்கு மிஞ்சியதை மட்டுமே கொடுப்பது தானமோ, தர்மமோ அல்ல, அது எச்சில்பண்டம், பிச்சை.
தனக்கு மிஞ்சியதை எப்படி நிர்ணயிப்பது?
ஆசைக்கோர்; அளவில்லாமல் இருப்பவர்களுக்கு எதுதான்
எப்போதுதான் மிஞ்சும்?
தானம் கொடுப்பவர்களின் மனப்பான்மை, சூழ்நிலை முதலியவற்றை அடிப்படையாக வைத்து தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று தானத்தையே கூட வகைப்படுத்தியுள்ளார்கள்.
பெயருக்காகவோ, கைம்மாறு கருதியோ, ஏதாவது காரணத்திற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ, பயத்தாலோ கொடுக்கப் படும் தானத்தைக் கடைப்படுதானம் அல்லது அதமதானம் என்று கூறுவார்கள்.
வசூல் செய்து, கூட்டத்தைக் கூட்டி, யாராவது முன்னிலையில் ஏழைகளைக் கூப்பிட்டு அவர்களுடைய இல்லாமையையும் இயலாமையையும் பகிரங்கப்படுத்தி, அவர்களுடைய சுயமரியாதையைப் பற்றிக் கவலையே படாமல், சில சில்லறைப் பொருள்களைப் பொட்டணம் போட்டு ஓராண்டிற்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு,
அந்த நிகழ்ச்சிக்கு முன்னரும் பின்னரும் படத்துடன் பத்திரிக்கையில் செய்தி போட்டுச் செய்யும் தானம் எந்த வகை தானத்தைச் சேர்ந்து என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தானம் கொடுப்பதும் கூட தகுதி பார்த்து, அதற்கேற்பச் செய்ய வேண்டும் என்று அறநூல்கள் கூறும்.
இதைப்பற்றி புறநானூற்றில் ஒரு பாடல் இருக்கிறது.
ஒரு கொடையாளி இரவலர்களின் தகுதியறிந்து கொடுக்காமல் சகட்டுமேனிக்குப் பரிசில்களைக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த ஔவையார் அதை எடுத்துக் காட்டி
ஒரு பாடலில் அந்த கொடையாளிக்கு உணர்த்தியிருக்கிறார்.
கொடுக்கவேண்டிய பரிசிலைத் தாமதப்படுத்தினான், ஒரு மன்னன். "போடா...***" என்று அந்தப் பரிசிலை வாங்காமலேயே ஔவையார் சென்றுவிட்டார்.
பிரியமாகவும் மரியாதையாகவும் கொடுத்த தினைமாவையும், நீலச்சிற்றாடையையும் அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.
யாருக்குக் கொடுக்கிறோம்; அவருக்கு எப்படி கொடுக்கவேண்டும்; எதைக் கொடுக்கவேண்டும்; எப்போது கொடுக்கவேண்டும் என்பதற்கெல்லாம் எழுதா முறைகள் வைத்திருந்தார்கள்.
'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று பழமொழி இருக்கிறதல்லவா? இதையும்கூட தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நெளிந்த அலுமினியப் பாத்திரத்தில் பிச்சை வாங்கினால் மிஞ்சியதைப் பழையதைப் பிச்சையாகப் போடலாம். தங்கப்
பாத்திரத்தைக் கொண்டுவந்தால் பொன் நாணயங்களாகப் போட வேண்டும் என்ற மாதிரியில் அவர்களாகவே நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
பாத்திரம் என்பது தகுதி. எந்த மாதிரியான தானத்துக்குத் தகுதி படைத்தவர்? அவருடைய தேவை எப்படிப்பட்டது? இதெல்லாம் முக்கியமாகக் கருதப்படும்.
'பெரிய மனிதர்கள் நிதி திரட்டினால் நிறையக் கொடுக்கவேண்டும். எளியவர்கள் எவ்வளவு தகுந்த காரியத்திற்காகக் கேட்டாலும் பிச்சைக்காரத்தனமாகக் கொடுக்க வேண்டும்', என்ற ரீதியில் எத்தனையோ பேர்கள் நடந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.
நியாயமாகச் சம்பாதித்து, சிக்கனமாக இருந்து, சேமிப்புடன், திட்டமிட்டு, தகுதி பார்த்து, ஏதாவது தர்மமும் செய்யவேண்டும். அதாவது தர்மத்தையும் மாதாந்திர பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் - என்பதனையே நீதி நூல்கள் வலியுறுத்துகின்றன.
இல்லற தர்மத்தைக் கூறும்போது சென்ற விருந்தினரை
வழியனுப்பிவிட்டு வாசலிலிருந்தவாறே அப்போதே, வரும் விருந்தை
எதிர்நோக்கும் மனப்பாங்கைப் பற்றிச் சொல்கிறார். யார்?
திருவள்ளுவர்தான் அப்படிச் சொன்னார்.
ஆகவே,
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
இல்லையேல்,
உளவரை தூக்காத ஒப்புரவாண்மை
வளவரை வல்லைக் கெடும்
முடிவில்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
'லட்சுமியை வழிபட்டால் நிறையச் செல்வங்களைத் தருவாள். நாமே வைத்துக் கொண்டு நாம் மட்டுமே நன்றாக இருப்போம்', என்று பெரும்பாலும் எண்ணத் தோன்றும்.
'தர்மமும் தானமும் வேறொரு பிரிவைச் சேர்ந்தவை. வேறு ஏதோ தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை', என்றும் நினைக்கக்கூடும்.
அவ்வாறில்லை. லட்சுமியின் வழிபாட்டில் தர்மத்துக்கு முக்கியமான பங்குண்டு. அளவான தர்மத்தை வழங்கிக் கொண்டே இருப்பது லட்சுமிகரத்தின் இன்றியமையாததொரு அம்சமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு உரிய சில சிறப்பியல்புகள் இருப்பதாகச் சொல்வார்கள்.
இவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சில விஷயங்களைத் தமிழர்கள் உயிருக்கும் மேலாகக் கருதி யிருக்கின்றனர்.
வீரம், மானம், ஈகை, சொல்லுறுதி, கடமை.
இவற்றுடன் மொழி, இனமான உணர்வு என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் இவற்றையும் உயிரினும் மேலாகக் கருதுபவர்கள்
இருக்கிறார்கள்.
1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஐ நினைவில் கொள்ளவேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை மனதில் கொள்ளவேண்டும்.
இப்படி எழுதியதற்கும் ஏதாவது மறுப்பு எழப்பக்கூடும்.
வேண்டாம்.
இவற்றிற்காக உயிரைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் ஆத்மாவைக் காயப்படுத்தவேண்டாம்.
இவற்றில் ஈகை, அறம், கொடை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
பொருள் தேடி வந்தவர்களுக்கு இல்லையெனாமல் கொடுப்பது
ஒரு பெரிய விஷயமாக இருந்தது.
கொடுக்க முடியாத சூழ்நிலையிலிருந்தால் அதை நினைத்து
வேதனைப் பட்டவர்கள் இருந்தனர்.
பஞ்ச காலத்தில் விதைத்த நெல்லை, அடியார்கள் உணவு கேட்டு வந்துவிட்டார்களே என்று பதைபதைத்து, மண்ணிலிருந்து கிளறி எடுத்து, குற்றி, புடைத்து, அரிசியாக்கி, சோறாக்கி அன்னம் படைத்த கதை ஒன்று இருக்கிறது.
யாராவது நாயனார்தானே இந்த மாதிரி வேலையையெல்லாம்
செய்வார்?
இல்லையென்றால் சங்க காலத்து வள்ளல்.
வள்ளல் தன்மை இருந்ததால்தான் கம்ப ராமாயணம் போன்ற சிருஷ்டிகள் தோன்றின.
ஆனால் பிற்காலத்தில் ஈகையை வெறுத்துக் கொடை கொடுக்காமல் தப்பிக்க வழி தேடிய யாரோ புண்ணியவான் ஒருவர் பழமொழி ஒன்றை ஏற்படுத்திவிட்டார். 'தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்' என்பதே அது. இதைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் நல்லது. ஆனால் உண்மையிலேயே கஞ்சத் தனத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்கே இந்தப் பழமொழி தற்சமயம் நம் மலேசிய நாட்டில் நம்மவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment