Monday, February 17, 2014

MAHA SAKATAHARA CHATHURTHI







மஹா சங்கடஹர சதுர்த்தி


மாசி மாதத்தில் செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை 'மஹாசங்கடஹர சதுர்த்தி' என்று குறிப்பிடுவார்கள்.
சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது. மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி இன்னும் விசேஷமானது. அதுவும் செவ்வாய்க்கிழமையில் வருவது இன்னும் பன்மடங்கு விசேஷமானது.

இன்று விநாயகரை சங்கடஹர கணபதியாக விசேஷமாக வழிபடவேண்டிய நாள்.
சங்கடம் என்பது மனதையும் உடலையும் அப்படியே அரித்து, சரியாக 
இயலவிடாமல் செய்யும்.
விக்னம் என்பது தடங்கல், இடையூறு, இடைஞ்சல். இது ஏற்படும்போது எப்படியாவது போராடிக்கொண்டே இருக்கலாம். தோல்விகளே ஏற்பட்டாலும் போராடிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால்....
சங்கடம் என்பது வேதனைகளால் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். 
சங்கடம் என்னும்போது High Noon படத்தில் Gary Cooper-இன் 
தோற்றம்தான் மனதுக்கு வருகிறது. சங்கடம் என்பதை அத்தனை துள்ளிதமாகச் சித்தரித்திருப்பார்.
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் சங்கடஹர கணபதி வழிபாடு பற்றி காணலாம்.

http://www.visvacomplex.com/shankashta_nasana_sriganesa_sthothram.html

http://www.visvacomplex.com/kariyasiddhi_maalai.html

http://www.visvacomplex.com/AnaiMuka_KadavuL_PORRi.html

சங்கடநாசன கணபதி த்வாதச நாமாவளி 

ஓம் ஸ்ரீ வக்ரதுண்டாய நம:
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நம: 
ஓம் ஸ்ரீ க்ருஷ்ண பிங்காக்ஷ¡ய நம:
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம:
ஓம் ஸ்ரீ லம்போதராய நம:
ஓம் ஸ்ரீ விகடாய நம:
ஓம் ஸ்ரீ விக்னராஜாய நம: 
ஓம் ஸ்ரீ தூம்ரவர்ணாய நம: 
ஓம் ஸ்ரீ பாலச்சந்த்ராய நம:
ஓம் ஸ்ரீ விநாயகாய நம:
ஓம் ஸ்ரீ கணபதயே நம: 
ஓம் ஸ்ரீ கஜானனாய நம:

ஓம் ஸ்ரீ சங்கடநாசன கணபதயே நமோ நம:
ஓம் ஸ்ரீ சித்திபுத்திவல்லபா தேவீ சமேத ஸ்ரீசக்தி கணபதயே நமோ நம:


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Sunday, February 2, 2014

PIRANMALAI CANNON














எது வரலாறு?

தமிழர்கள் பலர் அந்தப் பழைய ராஜாராணித்தனமான
வரலாறுகளையே 'அசல் வரலாறு' என்று நம்புகிறார்கள். அவ்வாறு எண்ணுவதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.
ஆனால் நேதாஜி சம்பந்தப்பட்டவையும் வரலாறுதானே. 
தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியும் திமுக ஆட்சியும் அதிமுக
தோற்றமும்கூட வரலாறுகள்தாம்.
அண்மையில் நடந்தவை என்பதால் இவற்றுக்கு வரலாற்று
அந்தஸ்து இல்லாமல் போய்விடவில்லை.
இன்று நடப்பது நாளை வரலாறு.


  • Vikneshwaran Adakkalam படத்தில் உள்ளது என்ன கருவி என மட்டுபடவில்லையே... பீரங்கி போல் உள்ளது சாய்ந்த தூண் போலவும் உள்ளது...
    5 hours ago · Like · 1
  • Jay Bee $
    1801-இல் சிவகங்கைச்சீமை மருது சேர்வைக்காரர்கள், ஊமைத்துரை ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட மூன்று பீரங்கிகளில் ஒன்று. 
    மேலூர், சிங்கம்புணரி, நத்தம் வழியாக வரும் இங்கிலீஷ் கும்பினிப் படைகளுக்காக இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. 
    1700 அடி உய்ரத்தில் இருந்து சுட்டால் குண்டு வெகு தூரம் போகும்.
    5 hours ago · Edited · Like · 2
  • Vikneshwaran Adakkalam அரிய தகவல் டாக்டர். பீரங்கிக்கான சாயல் கொஞ்சமாகவே உள்ளது. மலாக்கா பீரங்கிகளை பார்த்து வளர்ந்துவிட்டவர்கள் நாங்கள். ராஜாராணித்தனமான வரலாறுகளை ஏற்பதற்கு புனைவுகளே காரணம். நீங்கள் மேலே குறிப்பிட்ட ஊமைத்துரையை வைத்துக் கூட கல்கி ஒரு கதை எழுதியுள்ளார். மாடத்தேவன் சுனை அக்கதையின் பெயர்.
  • Jay Bee $
    வரலாறுக் கதை என்றாலேயே ராஜாராணித் தனத்தை வலிந்து புகுத்தி விடுகிறார்கள். 
    சின்ன மருது கைத்துப்பாக்கியெல்லாம் செருகி வைத்திருந்தார். அவருக்கு அதைச் சுடப் பழக்கியவர் கும்பினிப் படையின் கர்னல் வெல்ஷ். ஓர் அழகிய கைத்துப்பாக்கியையும் அன்பளிப்பாகக் கொடுத்
    திருக்கிறார். 
    சிவகங்கைச் சீமை ஆசாமிகள் வெறும் வேலையும் வீச்சரிவாளையும் மட்டும் நம்பியிருக்கவில்லை. மைசூர் திப்பு சுல்த்தானிடமிருந்து வாங்கிய மிலிட்டரி ராக்கெட்டுகளைச் சிங்கம்புணரிக் காடுகளில் சின்னமருது பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே முதல் தடவையாக மிலிட்டரி ராக்கெட்டுகள் அங்குதான் பயன்பட்டன. Military Archives-இல் காணலாம்.
  • Jay Bee $
    பீரங்கி பெரிய பீரங்கிதான். இது கொஞ்சம் விசேஷமானது. ஓர் அச்சின் மீது 45 டிகிரி பக்கவாட்டில் சுழலும். மேலும் கீழுமாகவும் அதைக் குறிவைக்கமுடியும். சற்றுக் குறுகிய குழல் - மூன்று அங்குலம் என்பதாலும் நீளமான குழாயாக இருப்பதாலும் நீண்ட தூரம் மிகுந்த விசையுடன் குண்டு செல்லும். 
    அதிகமாக அடிக்கடி வேகமாகப் பயன்படுத்தியதால் பின்பகுதி வெடித்துவிட்டது.

  • Jay Bee $
    அருகில் நிற்பது நான்தான். 
    ஐந்தடி பத்தங்குல உயரத்தை வைத்து பீரங்கியின் நீளத்தைக் கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள். 

    பீரங்கி சற்று ஒருக்கணித்திருப்பதால் கட்டையாகத் தெரிகிறது. 
    எட்டு அடிக்கும் மேற்பட்ட நீளம் இருக்கும். 

    சிங்கம்புணரி, பிரான்மலை, சிவகங்கைக்காரர்களும் இந்தப் படத்தை அவரவர் ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ளலாமே. பெருமைதானே.
    3 hours ago · Like · 2
  • Nandakumar Selvaraj Rockets were also used by haider in the battle of wandiwash or vandavasi. It was also used by british against american resistance in the american war of independence. Again i am repeating from one of dr. Jaybee's post.
  • Jay Bee $
    மிலிட்டரி ஆர்க்கைவ்ஸில் அவ்வாறு காணப்படுகிறது. 

    ஆனால் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பய்யன் ராமநாதபுரம் சேதுபதியின் மீது போர் தொடுத்தபோது ராமேஸ்வரம் தீவில் ரொம்பவும் பாதுகாப்பாக சேதுபதி இருந்து கொண்டார். 

    அப்போது இலங்கையிலிருந்த போர்த்துகீஸியருடைய கப்பல் படையை ராமப்ய்யன் உதவிக்கு அழைத்தான். 
    ஐந்து கப்பல்கள் வந்தன. 

    சேதுபதியிடம் பெரிய போர்க்கப்பல் ஒன்று இருந்தது. அதன் பெயர் பெண்டுகநாச்சி. 
    இந்தக் கப்பலில் இரண்டு பெரிய பீரங்கிகள் இருந்தன. ராமர், லட்சுமணர் என்ற பெயரிட்டிருந்தார்கள். இவற்றை வைத்து ஐந்து போர்த்துகீசியக் க்ப்பல்களையும் சேதுநாட்டார் அழித்து விட்டார்கள்.
    அந்தப் போரில் வாணங்களைப் பயன்படுத்தியதாகக் காணப் படுகிறது.

    இதையும் அகத்தியரின் முன்பு எழுதியிருக்கிறேன்.
  • Jay Bee

Tuesday, November 26, 2013

YATHARTHTHAM


யதார்த்தம்

தமிழில் உள்ள நூல்களில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் வகித்தவை 'நீதி நூல்கள்'. 
உலகியல், வாழ்வியல், யதார்த்தங்கள், உண்மைகள், ஸைக்காலஜி என்னும் மனவியல், Behaviour Science, Reaction and Abreaction, பழக்க வழக்கங்கள், மரபியல், உவமையியல், தத்துவங்கள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய நூல்கள் இருந்தன. 
குமரேச சதகம் போன்ற சதக நூல்கள், நீதிசாரம் போன்ற நூல்கள் அதிகமாகப் படிக்கப்பட்டன. 
இந்த Trend இன்று நேற்று ஏற்பட்டவை என்று சொல்லமுடியாது. 
புறநானூற்றிலேயே இந்த மாதிரியான கருத்துக்களையெல்லாம் காணலாம். 
மாதிரிக்கு ஒன்று.....

தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும் 
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும் 
உண்பது நாழி உடுப்பவை இரண்டே 
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே

இது புறநானூற்றுப் பாடல்.
என்ன அர்த்தம்?

கடலே எல்லையாகக் கொண்டு நிலம் முழுவதையும் வேறு யாருடனும் 
பங்கிட்டுக்கொள்ளாமல் தாமே தமக்குரியதாக தம்முடைய வெண் கொற்றக் குடையின் கீழ் தம்முடைய ஏகபோக ஆட்சியில் ஆண்டிருப்பவரும் சரி; 
நடுச்சாமமோ நடுப்பகலோ என்று பாராது இரவும் பகலுமாக தூங்காமல் 
உணவுக்காக காடுகளில் இருக்கும் மிருகங்களைத் தேடி அவற்றை 
வேட்டையாடுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட கல்வியில்லாத ஒருவருக்கும் சரி.......

உண்பது ஓர் ஆழாக்குப் படி உணவே
உடுப்பதுவும் அடிப்படையில் இரண்டே துணிகள்தாம்

இதைப் பாடியவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் வாழ்ந்தவர். 
பிற்காலப் புலவர் ஒருவர் பாடிய ஓர் உலகியல் யதார்த்தப் பாடலையும் 
பார்க்கலாம்.

அன்புடன்

ஜெயபாரதி

DHANA DHARMAM


தானமும் தர்மமும் 
அறஞ்செய விரும்பு

அன்பர்களே,


ஈகை நம் சமுதாயத்தில் எவ்வளவோ முக்கியத்துவம் வகித்தது.
ஆனால் பிற்காலத்தில் ஈகையை வெறுத்து, கொடை 
கொடுக்காமல் தப்பிக்க வழி தேடிய யாரோ புண்ணியவான் ஒருவர் பழமொழி ஒன்றை ஏற்படுத்திவிட்டார். 
'தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்' என்பதே அது. இதைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் நல்லது. 
ஆனால் உண்மையிலேயே கஞ்சத் தனத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்கே இந்தப் பழமொழி தற்சமயம் நாட்டில் (மலேசியா) நம்மவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
நல்லவேலை ஔவையார் காது பட இந்த ஆள் இதைச் சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் பாடியே சபித்துவிட்டிருப்பார். 

தன்னையும் மிஞ்சி தானமும் தர்மமும் செய்தவர்களின் 
பெயரும் புகழும்தான் இன்றளவும் வாழ்கின்றன.

பெண் ஒருத்தி தன்னையும் மிஞ்சி அளித்த நெல்லிக்கனி 
தானம்தான் உலகிற்கு கனகதாரா தோத்திரத்தை ஆதிசங்கரரின் 
வாயிலாக ஏற்படுத்தித் தந்தது.
தன் தலையையும் புலவருக்குக் கொடுத்த குமணனின் பெயர் நிலைத்து நிற்கிறது.

ஈரக்குணம் இல்லாதவர்கள் நம்முடைய நீதி சாஸ்திரங்களாலும் பெரும் புலவர்களலும் சபிக்கப்பட்டவர்கள்!

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு'   (குறள்)

சமுதாயம் நோயுற்ற சமுதாயமாக விளங்கி விடக்கூடாது 
என்பதற்காகத்தான் முப்பத்திரண்டு வகை அறங்களை 
ஏற்படுத்தினார்கள். 
தர்மங்களைப் போற்றிப் பாதுகாப்பவள் அம்பிகை. 
அறம் வளர்த்த நாயகியாகவும் தர்ம சம்வர்த்தினியாகவும் 
அன்னபூரணியாகவும் அவளே விளங்குகின்றாள்? 
தர்மம் என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்தது. 
Caring Society என்பதைத் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே தர்மங்களின் உதவியோடு நிறுவியிருக்கிறார்கள்.

சமுதாயத்தை ஆங்கில மரபில் இருவகையாகப் பிரித்துள்ளனர். 
‘Give Society, Take Society’ கொடுக்கும் சமுதாயம் எடுத்துக் கொள்ளும் சமுதாயம் என்பவையே அவை. 
கொடுக்கும் சமுதாயம் தியாக உணர்வு கொண்டது. 
எடுத்துக் கொள்ளும் சமுதாயத்தில் சுயநல உணர்வுதான் மேலோங்கி நிற்கும். 
கொடுக்கும் சமுதாயத்தின் தியாகத்தால் எடுத்துக் கொள்ளும் சமுதாயம் வாழ்ந்து, வளர்ந்து, வளமுடன் விளங்கும். 
இது மனித சமூகவியல் நியதி. 
கொடுக்கும் சமுதாயம் இல்லையெனில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர். சமுதாயமும் முடிவில் அழிந்துவிடும்.

டார்வின் சித்தாந்தப்படி மிருக உணர்வு கொண்ட பலவான்களே எஞ்சுவர்.

தனக்கு மிஞ்சியே தானம் செய்யுமாறு எந்தச் சமயமும் 
போதிக்கவில்லை.

தன்னுடைய சம்பாத்தியம் எவ்வளவாக இருப்பினும் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸக்காட் (zakat), ·பித்ரா Fitra என்ற பெயரில் கொடுக்குமாறு இஸ்லாம் கூறுகிறது. 
'டித்' (Tith) என்ற பெயரில் அதுபோன்ற தர்மத்தைக் கிருத்துவம் வலியுறுத்துகிறது. 
'தம்மதான' என்று அதையே பெளத்தமும் வற்புறுத்துகிறது. 
'ஸெடெக்கா' என்றொரு வகை தர்மத்தை யூதர்கள் செய்கிறார்கள். 
இவை அனைத்துமே வலியுறுத்தப்பட்ட தர்மங்கள்.

இந்து சமயம் மட்டும் விதிவிலக்கா என்ன?

தனக்கு மிஞ்சியதை மட்டுமே கொடுப்பது தானமோ, தர்மமோ அல்ல, அது எச்சில்பண்டம், பிச்சை. 
தனக்கு மிஞ்சியதை எப்படி நிர்ணயிப்பது? 
ஆசைக்கோர்; அளவில்லாமல் இருப்பவர்களுக்கு எதுதான் 
எப்போதுதான் மிஞ்சும்?

தானம் கொடுப்பவர்களின் மனப்பான்மை, சூழ்நிலை முதலியவற்றை அடிப்படையாக வைத்து தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று தானத்தையே கூட வகைப்படுத்தியுள்ளார்கள். 
பெயருக்காகவோ, கைம்மாறு கருதியோ, ஏதாவது  காரணத்திற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ, பயத்தாலோ கொடுக்கப் படும் தானத்தைக் கடைப்படுதானம் அல்லது அதமதானம் என்று கூறுவார்கள். 
வசூல் செய்து, கூட்டத்தைக் கூட்டி, யாராவது முன்னிலையில் ஏழைகளைக் கூப்பிட்டு அவர்களுடைய இல்லாமையையும் இயலாமையையும் பகிரங்கப்படுத்தி, அவர்களுடைய சுயமரியாதையைப் பற்றிக் கவலையே படாமல், சில சில்லறைப் பொருள்களைப் பொட்டணம் போட்டு ஓராண்டிற்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, 
அந்த நிகழ்ச்சிக்கு முன்னரும் பின்னரும் படத்துடன் பத்திரிக்கையில் செய்தி போட்டுச் செய்யும் தானம் எந்த வகை தானத்தைச் சேர்ந்து என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


தானம் கொடுப்பதும் கூட தகுதி பார்த்து, அதற்கேற்பச் செய்ய வேண்டும் என்று அறநூல்கள் கூறும். 

இதைப்பற்றி புறநானூற்றில் ஒரு பாடல் இருக்கிறது. 

ஒரு கொடையாளி இரவலர்களின் தகுதியறிந்து கொடுக்காமல் சகட்டுமேனிக்குப் பரிசில்களைக் கொடுத்துக்கொண்டிருந்தான். 
இதைப் பார்த்த ஔவையார் அதை எடுத்துக் காட்டி 
ஒரு பாடலில் அந்த கொடையாளிக்கு உணர்த்தியிருக்கிறார். 

கொடுக்கவேண்டிய பரிசிலைத் தாமதப்படுத்தினான், ஒரு மன்னன். "போடா...***" என்று அந்தப் பரிசிலை வாங்காமலேயே ஔவையார் சென்றுவிட்டார். 

பிரியமாகவும் மரியாதையாகவும் கொடுத்த தினைமாவையும், நீலச்சிற்றாடையையும் அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். 

யாருக்குக் கொடுக்கிறோம்; அவருக்கு எப்படி கொடுக்கவேண்டும்; எதைக் கொடுக்கவேண்டும்; எப்போது கொடுக்கவேண்டும் என்பதற்கெல்லாம் எழுதா முறைகள் வைத்திருந்தார்கள்.

'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று பழமொழி இருக்கிறதல்லவா? இதையும்கூட தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 
நெளிந்த அலுமினியப் பாத்திரத்தில் பிச்சை வாங்கினால்  மிஞ்சியதைப் பழையதைப் பிச்சையாகப் போடலாம். தங்கப் 
பாத்திரத்தைக் கொண்டுவந்தால் பொன் நாணயங்களாகப்  போட வேண்டும் என்ற மாதிரியில் அவர்களாகவே நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். 
பாத்திரம் என்பது தகுதி. எந்த மாதிரியான தானத்துக்குத் தகுதி படைத்தவர்? அவருடைய தேவை எப்படிப்பட்டது? இதெல்லாம் முக்கியமாகக் கருதப்படும்.
'பெரிய மனிதர்கள் நிதி திரட்டினால் நிறையக் கொடுக்கவேண்டும். எளியவர்கள் எவ்வளவு தகுந்த காரியத்திற்காகக் கேட்டாலும் பிச்சைக்காரத்தனமாகக் கொடுக்க வேண்டும்', என்ற ரீதியில் எத்தனையோ பேர்கள் நடந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

நியாயமாகச் சம்பாதித்து, சிக்கனமாக இருந்து, சேமிப்புடன், திட்டமிட்டு, தகுதி பார்த்து, ஏதாவது தர்மமும் செய்யவேண்டும். அதாவது தர்மத்தையும் மாதாந்திர பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் - என்பதனையே நீதி நூல்கள் வலியுறுத்துகின்றன.

இல்லற தர்மத்தைக் கூறும்போது சென்ற விருந்தினரை 
வழியனுப்பிவிட்டு வாசலிலிருந்தவாறே அப்போதே, வரும் விருந்தை 
எதிர்நோக்கும் மனப்பாங்கைப் பற்றிச் சொல்கிறார். யார்?
திருவள்ளுவர்தான் அப்படிச் சொன்னார்.

ஆகவே,

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

இல்லையேல்,

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை
வளவரை வல்லைக் கெடும்

முடிவில்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

'லட்சுமியை வழிபட்டால் நிறையச் செல்வங்களைத் தருவாள். நாமே வைத்துக் கொண்டு நாம் மட்டுமே நன்றாக இருப்போம்', என்று பெரும்பாலும் எண்ணத் தோன்றும். 
'தர்மமும் தானமும் வேறொரு பிரிவைச் சேர்ந்தவை. வேறு ஏதோ தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை', என்றும் நினைக்கக்கூடும்.

அவ்வாறில்லை. லட்சுமியின் வழிபாட்டில் தர்மத்துக்கு முக்கியமான பங்குண்டு. அளவான தர்மத்தை வழங்கிக் கொண்டே இருப்பது லட்சுமிகரத்தின் இன்றியமையாததொரு அம்சமாகக் கருதப்படுகிறது.

தமிழர்களுக்கு உரிய சில சிறப்பியல்புகள் இருப்பதாகச்  சொல்வார்கள். 
இவை என்னென்ன என்று பார்க்கலாம். 
சில விஷயங்களைத் தமிழர்கள் உயிருக்கும் மேலாகக் கருதி யிருக்கின்றனர். 
வீரம், மானம், ஈகை, சொல்லுறுதி, கடமை.
இவற்றுடன் மொழி, இனமான உணர்வு என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
ஏனெனில் இவற்றையும் உயிரினும் மேலாகக் கருதுபவர்கள்  
இருக்கிறார்கள். 
1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஐ நினைவில் கொள்ளவேண்டும். 
ஈழ விடுதலைப் போராட்டத்தை மனதில் கொள்ளவேண்டும்.
இப்படி எழுதியதற்கும் ஏதாவது மறுப்பு எழப்பக்கூடும்.
வேண்டாம். 
இவற்றிற்காக உயிரைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். 
அவர்களின் ஆத்மாவைக் காயப்படுத்தவேண்டாம்.

இவற்றில் ஈகை, அறம், கொடை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
பொருள் தேடி வந்தவர்களுக்கு இல்லையெனாமல் கொடுப்பது 
ஒரு பெரிய விஷயமாக இருந்தது. 
கொடுக்க முடியாத சூழ்நிலையிலிருந்தால் அதை நினைத்து 
வேதனைப் பட்டவர்கள் இருந்தனர். 
பஞ்ச காலத்தில் விதைத்த நெல்லை, அடியார்கள் உணவு கேட்டு வந்துவிட்டார்களே என்று பதைபதைத்து, மண்ணிலிருந்து கிளறி எடுத்து, குற்றி, புடைத்து, அரிசியாக்கி, சோறாக்கி அன்னம் படைத்த கதை ஒன்று இருக்கிறது. 
யாராவது நாயனார்தானே இந்த மாதிரி வேலையையெல்லாம் 
செய்வார்?
இல்லையென்றால் சங்க காலத்து வள்ளல். 
வள்ளல் தன்மை இருந்ததால்தான் கம்ப ராமாயணம் போன்ற சிருஷ்டிகள் தோன்றின.

ஆனால் பிற்காலத்தில் ஈகையை வெறுத்துக் கொடை கொடுக்காமல் தப்பிக்க வழி தேடிய யாரோ புண்ணியவான் ஒருவர் பழமொழி ஒன்றை ஏற்படுத்திவிட்டார். 'தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்' என்பதே அது. இதைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் நல்லது. ஆனால் உண்மையிலேயே கஞ்சத் தனத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்கே இந்தப் பழமொழி தற்சமயம் நம் மலேசிய நாட்டில் நம்மவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$