Wednesday, June 12, 2013

HERO OR VILLAIN-#1


 ஹீரோவா, வில்லனா? -#1



இது உண்மையான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தொகுத்து எழுதப் பட்டது. 
எழுதி ஏழாண்டுகள் ஆகின்றன. 
இன்னும் கொஞ்சம் விபரங்களைச் சேர்த்து பிழைகளை நீக்கி, செப்பம் செய்து எழுதியிருக்கிறேன்.

ஊமையனின் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மு பாஞ்சாலங் குரிச்சி அதிபராக இருந்தவர். ரொம்பவும் Controversial-ஆன ஆசாமி. 
அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அந்தக் காலத்தில் மந்திரி, நிதிஅமைச்சர், படைத்தலைவர் போன்ற பல துறைகளில் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமாக கொசிறு, துக்கடா சேர்ந்து ஆன கூட்டுக்கறிப் பதவிகள் இருந்தன. தளவாய், தானாபதி, பேஷ்வா போன்றவை. 
கட்டபொம்முவுக்கு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தானாபதியாக 
இருந்தார். அவரை தானாபதியா பிள்ளை என்றே அழைத்தார்கள்.
கட்டபொம்மு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமெல்லாம் ரொம்ப 
விவகாரமான விஷயங்கள். 
அது போலவேதான் தானாபதியா பிள்ளையும்.
வீரபாண்டிய கட்டபொம்மு சினிமாப் படத்தில் இந்தப் பாத்திரத்தை உத்தமர்களில் உத்தமராகச் சித்தரித்திருப்பார்கள்.
ஆனால் இவர்தான் ரொம்பவும் Controversial-ஆன ஆசாமி. 

உண்மையிலேயே வெள்ளைக்காரர்களுக்கு விரோதி என்றால் இந்த 
ஆசாமிதான். 
கட்டபொம்மு தாம் ஆட்சியிலிருந்த ஒன்பது ஆண்டுகளில் பெரும்பகுதி வெள்ளைக்காரர்களுடன் நேசமாக இருந்த ஆள். 
ஒழுங்காக வரிகளைக் கட்டிக்கொண்டு ஆரம்பத்தில் இருந்தார்.
தானாபதியா பிள்ளை பாஞ்சாலங்குரிச்சியில் ஒரு சர்வாதிகாரியாக 
விளங்கியவர்.
இவர் தமிழகமெங்கும், அதற்கு அப்பால் மைசூர், கேரளா ஆகிய இடங்களிலும் விளங்கிய ஒரு மாபெரும் ரகசிய உளவாளி நெட்வர்க், 
திட்டமிடல் போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகித்தவர். 
இந்த நெட்வர்க் பிரிட்டிஷ் ஈஸ்ட் இண்டியாக் கம்ப்பெனிக்கு 
எதிரானது. கும்பினி என்றும் கும்பினியார் என்றும் அக்காலத் தமிழர்கள் 
இந்தக் கம்பெனியைக் குறிப்பிட்டனர்.
வரி வசூல், வர்த்தகம் போன்றவை தவிர படைபலத்தாலும் ஆயுத 
பலத்தாலும் சூழ்ச்சியாலும் நாட்டைப் பிடித்துக்கொள்ளும் எண்ணமும் 
கும்பினிக்கு இருந்தது என்பதை அந்தக் காலத்தில் இந்த புரட்சி 
நெட்வர்க்கினர் அறிந்திருந்தனர். பல பாளையங்கள், மைசூர், கேரளா 
முதலிய இடங்களில் நெட்வர்க் இருந்தது.
கட்டபொம்முவுக்கு ஆலோசனைகள் சொல்வதுடன் தம் வாக்கு 
சாதுர்யத்தால் மற்ற பாளையக்காரர்களையும் கலகம் செய்யத் தூண்டி
விட்டுக்கொண்டேயிருந்தார்.
கட்டபொம்முவுக்கு வெள்ளைக்காரர்களுடன் ஏற்பட்ட அத்தனை 
பிணக்குகளுக்கும் தானாபதியா பிள்ளைதான் காரணர்.
கட்டபொம்முவை விசாரிக்க அழைத்த ஜேக்ஸன் துரையின் 
அதிகாரத்தை ஒழித்தவர் தானாபதியா பிள்ளை. 
ஆனானப்பட்ட ஜேக்ஸனையே ஒடுக்கியவர் என்ற மமதையும் அவருக்கு இருந்தது. 
அவர் செய்து வந்த இடக்கான காரியங்களையெல்லாம் அப்போது 
தென்மாவட்டக் கலெக்டராக இருந்த லூஷிங்க்டன் சென்னைக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தார். 
வெள்ளைக்காரர்களின் முக்கிய முதல் எதிரியாகத் தானாபதியா 
பிள்ளையை அவர்கள் கருதினார்கள்.
நிலவரங்களைக் கண்டித்தும் காரணம் கேட்டும் லூஷிங்க்டன் 
கட்டபொம்முவுக்குக் கடிதங்கள் அனுப்பியிருந்தார். 
அந்தக் கடிதங்களையெல்லாம் தானாபதியா பிள்ளை படித்துவிட்டுக் 
கிழித்துவிடுவார். 
கட்டபொம்முவிடம் சொல்வதுமில்லை. 

அப்படியிருக்கும்போது தானாபதியா பிள்ளையின் மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 
கட்டபொம்முவைவிட அந்த வட்டாரத்தில் தானாபதியா பிள்ளைக்கே 
செல்வாக்கு அதிகம். 
ஆகவே பெருங்கூட்டம் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. 
திருமணத்துக்குக் கட்டபொம்மு நெல்லும் வெள்ளி ரூபாய்களும் 
கொடுத்தார். பணம் போதுமானதாக இருந்தது. 
ஆனால் நெல் போதவில்லை.
அந்தக் காலகட்டத்தில் பாளையங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் பணமாக வரி வசூலித்ததுபோக நெல்லாகவும் வசூலித்தார்கள்.
இதையே பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாகிய கும்பினியும் செய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு இடங்களில் பிரம்மாண்டமான 
நெற்களஞ்சியங்களைக் கும்பினி வைத்திருந்தது. 
அதைத் தானாபதியா பிள்ளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டார். 
ஐம்பது பேர் கொண்ட அதிரடித் தாக்குதல் வீரர்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார். 
அந்தக் காலத்தில் நம்ம ஆட்களும் Special Forces, Commando போன்ற விசேஷப் பிரிவுகளை வைத்திருந்தார்கள்.
வீட்டுக்கு ஒரு ஆள் என்ற வகையில் ஈட்டியையும் அகப்பட்ட கத்தி, 
கம்பு, கபடாக்களைத் தூக்கிக்கொண்டு சினிமாவில் 'பொதுப் பொது'வென்று ஓடிவருவது போன்றவையெல்லாம் கிடையாது. எல்லாருமே Standing Army வைத்திருந்தார்கள்.  
இதைப் பற்றி ரொம்பவும் விரிவாக எழுதலாம். 
அப்புறம் அந்த தானாபதியா பிள்ளை காணாமல் போய்விடுவார்.
பிள்ளைவாள் அந்த ஸ்பெஷல் ஸ்குவாடைப் பார்த்துச் சொன்னார்:
"இந்த நெல்லெல்லாம் நம்முடையது. வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளை மூஞ்சிக் குரங்குகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும்?" 
இந்த வசனத்தை தானாபதியா பிள்ளைதான் நெல்லைக் கொள்ளை 
அடிப்பதற்கு முன்னர் சொன்னார் என்பார்கள்.
ஆனால் அவருக்கும் முன்னால் மேலூர்க் கள்ளர்கள் இதே வாசகத்தைச் சொல்லி வரி கட்டாமல் இருந்து போராடியிருக்கின்றனர்.
திட்டமிட்டபடியே கொள்ளயடித்துவிட்டார்கள். 
களஞ்சியத்தின் காவலாளியை அடித்துக் குற்றுயிராகக் களஞ்சியத்தில் தூக்கிப்போட்டு, அவன் உடல்மேல் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். 

இந்த நான்கு நெற்களஞ்சியங்களுக்கெல்லாம் பொறுப்பாளராக 
பிர்க்கெட் என்னும் துரை இருந்தார். அவர் நெல்லின் விலைப் பருவத்துக்
கேற்ப நெல்லை விற்றுப் பணமாக்கிக் கும்பினியிடம் சேர்ப்பித்து விடுவார். 
விஷயம் அறிந்த பிர்க்கெட் கட்டபொம்முவை நேரில் வந்து பார்த்து 
விசாரித்தார். தானாபதியைத் தம்மிடம் ஒப்படைக்கச் சொன்னார். 
கட்டபொம்மு கும்பினிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி அதற்கும் 
மேலாகக் கூடுதல் தொகை கொடுக்க முன்வந்தார். 
அப்போது தானாபதியா பிள்ளை வேகமாக வந்து தெலுங்கில் 
கட்டபொம்முவிடம் "பணிந்துபோகவே கூடாது", என்று சொல்லி, 
சென்னையில் இருக்கும் கும்பினி தலைமையகத்துக்குச் சென்று 
முறையிடலாம் என்று சொல்லி, "வெள்ளைமூஞ்சிக் குரங்குகளுக்குப் பயப்படக்கூடாது" என்றும் சொன்னார். 
'தானாபதி ஏதோ நெகட்டிவாகச் சொல்கிறான்', என்று பிர்க்கெட் 
அறிந்துகொண்டதோடு 'வெள்ளைமூஞ்சிக் குரங்கு' என்று தம்மைத் 
திட்டுவதையும் புரிந்துகொண்டார். 
ஒரு மொழியை அறிந்துகொள்ளும்போது இந்த மாதிரி திட்டு, வசவு, கெட்டவார்த்தை போன்றவற்றைத்தான் முதலில் அறிந்துகொள்வார்கள். 
அதாவது Normal-ஆன ஆசாமிகள். 
இதையெல்லாம் பிர்க்கெட் சென்னைக்கு ரிப்போர்ட் செய்துவிட்டார். 
கட்டபொம்முவாலும் தானாபதியாலும் பயமுறுத்தப்பட்ட 
பாளையக்காரர்கள் பிராது கொடுத்தனர். 
மேஜர் பானர்மேன் தலைமையில் பெரும்படை திரட்டப்பட்டு 
பாஞ்சாலக்குரிச்சிக்கு வந்து சேர்ந்தது. 
போர் ஆரம்பித்துவிட்டது. 
திடீரென்று கோட்டையை விட்டுவிட்டு தப்பிச்சென்று திருச்சியில் இருக்கும் கும்பினித் தலைமைத்துவத்தைச் சந்தித்துப் பேசி Negotiate 
செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தோடு 09 -09 - 1799 அன்று 
பாஞ்சாலங்குரிச்சி கோட்டையைக் கைவிட்டு விட்டு கட்டபொம்முவும் 
வேறு சிலரும் தப்பிச்சென்றனர். இதுவும் தானாபதியா பிள்ளையின் 
யோசனைதான்.
கால்நடையாக நாகலாபுரத்துக்குச் சென்று அங்கிருந்து கோலார்பட்டி 
ஜமீனுக்குச் சென்றனர்.
கட்டபொம்முவின் கடும் எதிரியாகிய எட்டயாபுரத்து எட்டப்ப 
நாயக்கரிடம் கட்டபொம்முவைத் தேடிப்பிடிக்கும் கடமை ஒப்படைக்கப் பட்டது. 
வெள்ளையர்கள் உட்பட ஆயிரம் வீரர்கள் கொண்ட படை கோலார்பட்டி அரண்மனையைச் சுற்றி வளைத்துக்கொண்டது. 
கட்டபொம்மு மாடியிலிருந்து அதைப் பார்த்துவிட்டு, தாமும் இன்னும் சிலரும் வெகு நெருக்கமாகக் குதிரைகளில் பாய்ந்து கத்தியால் வெட்டிக் கொண்டே வியூகத்தைப் பிளந்துவிட்டு முன்செல்வது என்றும் தானாபதியா பிள்ளை பின்தொடர்ந்து வருவது என்றும் திட்டமிட்டார். 
ஆயிரம் பேர் கொண்ட படையைத் தம்முடைய சிறிய படையால் பிளந்து கொண்டு கட்டபொம்மு தப்பிச்சென்றார்.
அவர்களுடன் தொடர்ந்து வந்திருக்கவேண்டிய தானாபதியா பிள்ளை 
மாட்டிக்கொண்டார். 
கட்டபொம்முவைவிட அபாயமான ஆள் தானாபதிதான் என்று பானர்மேன் அறிவித்துவிட்டு உடனடியாகத் தூக்கில்போட உத்தரவிட்டான்.
பாஞ்சாலங்குரிச்சியைவிட்டு கட்டபொம்மு வெளியேறிய ஐந்தாம் நாள் நாகலாபுரத்தில் ஒப்புக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு அருகிலிருந்த வேப்பமரத்தில் தானாபதியா பிள்ளையைத் தூக்கில் போடச்செய்தான்.
அவர் இறந்தவுடன் அவர் தலையை உடலிலிருந்து வெட்டி எடுத்தார்கள். அதைப் பாஞ்சாலங்குரிச்சிக்கு எடுத்து வந்தார்கள்.
பழங்காலத்தில் தமிழர்களிடையே இருந்த கொடிய தண்டனைகளில் 
கழுவில் ஏற்றலும் இருந்தது. 
ஒரு கழுமரத்தை எடுத்து அதில் தானாபதியா பிள்ளையின் தலையைச் செருகி அந்தக் கழுமரத்தை பாஞ்சாலங்குரிச்சி அரண்மனையின் முன் நட்டுவைத்தார்கள். 
மக்கள் அனைவரையும் வந்து பார்க்கச் செய்தார்கள். 
தானாபதியின் தலையற்ற உடலை நாகலாபுரத்தில் நாய்களுக்கும் 
நரிகளுக்கும் இரையாகுமாறு போட்டுவைத்தார்கள். 
மேஜர் பானர்மேனின் சீற்றம் அந்த அளவுக்கு இருந்தது. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$